காதலர் தின சீசனில் இம்முறை ரோஜா ஏற்றுமதி குறைந்துள்ளது: ஹோசூர் ரோஜா விவசாயிகள் கவலை


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா சாகுபடி நடந்துவருகிறது. காதலர் தினம் போன்ற சமயங்களில் இங்கிருந்து உலகெங்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாவது வழக்கம்.

இந்தாண்டு காதலர் தினம் நெருங்கிவிட்ட நிலையில் கிருஷ்ணகிரியிலிருந்து ரோஜா ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூர் பகுதியில் இருந்து வழக்கமாக காதலர் தின சீசனில் சுமார் ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதியாவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ரோஜா மலர்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் 20 முதல் 25 ரூபாய் வரை விற்ற மலர்கள் தற்போது 10 முதல் 15 ரூபாய் வரையே விலைபோவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தாண்டு காதலர் தின சீசன் மந்தமாக இருக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ரோஜா மலர் சாகுபடித் தொழில் பூத்துக் குலுங்க வேண்டுமென்றால் அரசுத் தரப்பிலிருந்து உதவிகள் தேவை என கூறுகின்றனர் விவசாயிகள். குளிர்சாதன கிடங்குகள் அமைத்தல், விற்பனை வளாகம் அமைத்தல், மானிய உதவிகள் என பல கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.

சீனாவிலிருந்தும் கென்யா போன்ற ஆஃப்ரிக்க நாடுகளில் இருந்தும் ரோஜா மலர்கள் சர்வதேச சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதுவும் ரோஜா மலர்களின் விலை உலக சந்தையில் குறைய காரணமாகி உள்ளது. இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலமாக இல்லாமல் நேரடியாக ரோஜா ஏற்றுமதி செய்ய அரசு வழிவகை செய்வதன் மூலம் வெளிநாட்டு போட்டிகளை சமாளிக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள்

POST COMMENTS VIEW COMMENTS