'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா!' - 'Scam 1992' சீரிஸ் தரும் தாக்கம் என்ன?

'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா!' - 'Scam 1992' சீரிஸ் தரும் தாக்கம் என்ன?
'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா!' - 'Scam 1992' சீரிஸ் தரும் தாக்கம் என்ன?

1982. இல் கையில் ஐந்து பைசாகூடா இல்லாமல், அடுத்து என்ன தொழில் செய்து சம்பாதிப்பது எனத் தெரியாமல் இருந்த ஒருவர், 1992-ல் அம்பானியைவிட அதிகமாக வருமானவரி கட்டும் ஆளாக மாறுகிறார். அதே நபர் 2002 தொடங்குவதற்கு முந்தைய இரவில், ஒரு கைதியாக அரசு மருத்துவமனை நாற்காலியில் உட்கார்ந்திருந்தபடியே, அருகே யாருமே இல்லாமல் இறந்துபோகிறார். வாழ்க்கை எல்லாருக்குமானது. அதிலிருந்து நாம் என்ன எடுக்கிறோம், என்ன கொடுக்குறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். இதற்கு வெளியே எங்கெங்கோ சென்று பெரிதாக சரித்திரத்தை எல்லாம் கிளறிப் பார்க்க வேண்டியதில்லை. நம் ஊரிலேயே, நம் அருகிலேயே அப்படி நிறைய கதைகள் இருக்கின்றன. அப்படி ஒரு கதைதான்... 'Scam 1992'.

ஹர்ஷத் மேத்தா என்னும் பெயரை எனக்கெல்லாம் ஆயுளுக்கும் மறக்காது. ஏனெனில், இப்போது வேண்டுமென்றால், ஒரு லட்சம் கோடி, ரெண்டு லட்சம் கோடி என்று சொல்வது பெரிய தொகையாக கருதாமல் இருக்கலாம். ஆனால், 1992-ல பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு ரூ.500 கோடி என்பது உலக மகா அமவுன்ட். அதற்கு எத்தனை சைபர் என்றுகூட தெரியாது. உண்மையிலயே, அதற்கு எத்தனை சைபர் என்று நாங்கள் பள்ளியில் கணக்குப் போட்டோம். அப்படி ஒரு சம்பவம் அது. அப்படி ஓர் அதிர்ச்சி அது. தினமும் நாளிதழைத் திறந்தாலே அந்தச் செய்திதான் தலைப்பில் இருக்கும். ஒவ்வொரு நாளும் கோடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிது புதிதாக பெயர்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். திடீரென ஒருநாள், அன்றைக்குப் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவுக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக, புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பேட்டி கொடுக்கிறார். எல்லோருக்கும் அதிர்ச்சி. அது யாருமே எதிர்பாராத செய்தி. 'நரசிம்மராவ் பேசவே மாட்டாரு. அவரெல்லாம் இந்த விவகாரத்தில் தொடர்பு'-ன்னு தகவல் வந்தால் எப்படி இருக்கும்?

நடந்தது என்ன... யார் இந்த ஹர்ஷத் மேத்தா? பொதுவாக, பங்குச்சந்தை என்பது அறிவாளிகள் புழங்கும் இடம் என்று நினைப்பதுண்டு. இப்போதும்கூட பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் பலருக்கும் முழுமையாக எதுவும் தெரியவதில்லை. ஏதோ பங்குகளை வாங்குவாங்க... அதோட விலை அதிகமானதும் விற்பாங்க... அதுல வர்ற லாபத்தை நமக்கு ப்ரோக்கர் கமிஷன் போக தருவாங்க... அவ்ளோதான்' என்கிற அளவிலேயே முதலீடு செய்வதும் நடக்கிறது. ஒரு பங்கின் விலை எப்படி ஏறுகிறது, ஏன் இறங்குகிறது என்ற புரிதல்கூட இல்லாமல், 'பணம் போட்டோமா, லாபம் வந்துச்சா' என்னும் மனநிலையில் இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கூகுளில் தேடினாலே பங்குச்சந்தை குறித்த தகவல்கள் அத்தனையும் கொட்டும்.

எனினும், இப்போதும்கூட கண்மூடித்தனமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது நடக்கும்போது, ஒரு கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து, இந்தப் பங்கின் விலை இப்போது இவ்வளவு ஏறியிருக்கிறது; இவ்வளவு இறங்கியிருக்கிறது என்று எழுதிக்கொண்டிருந்த 1980-களை யோசித்துப் பாருங்களேன். ஒரு தகவல் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்க்குப் போய் சேரவே பல மணி நேரம் ஆகும். இப்போது கணினி - மொபைலில் இங்கே என்ட்ரி செய்தால், எங்கிருந்து வேண்டுமானாலும் உடனே பார்க்கலாம். ஆனால், அந்தக் காலத்தில் எல்லாமே பேப்பர்தான். எழுதி எழுதி ரெஜிஸ்டர்களை அடுக்கி வைப்பார்கள். ஒரு விஷயத்தை க்ராஸ் செக் பண்ணவேண்டும் என்றால்கூட, மொத்த ரெஜிஸ்டர்களையும் புரட்டவேண்டும். அப்படியான காலத்தில் அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஹர்ஷத் மேத்தா என்னும் குஜராத்காரர் ஷேர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்கிறார்.

பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதை மெள்ள மெள்ள கற்றுக்கொள்கிறார். ஆரம்பத்தில் ஒரு முதலாளிக்கு கீழ் ஜாப்பராக இருந்தவர், சிறிது காலத்தில் தனி நிறுவனம் தொடங்குகிறார். 'எந்தப் பங்கு எப்போ ஏறணும், எப்போ இறங்கணும்' என்று சிலர் முடிவு செய்வதைக் கவனிக்கிறார். ஒரு நிறுவனம் தமது பொருள்களின் விலையைக் கூட்டும்போது, ஆட்டோமேட்டிக்காக அவை விற்பனையாகும் விகிதம் குறைந்துவிடும். அப்போது பங்குச் சந்தையில் மதிப்பும் குறையும். நாம் அதே பங்குகளை அதிகளவு விலைக்கு வாங்கி வைத்திருந்தால், அடுத்து விலை குறையும்போது நமக்கு நஷ்டமாகும். ஆக, அந்த நிறுவனம் தமது பொருள்களின் விலையை எப்போது கூட்டப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால், அப்படி பொருள்களின் விலையை ஏற்றுவதற்கு முந்தைய நாளிலேயே நம் வசம் வைத்துள்ள பங்குகளை அதிக விலைக்கு விற்றுவிட்டால், அவற்றை வாங்கப்போகிறவர்களுக்கு நஷ்டம்; ஆனால், விற்றவருக்கு லாபம். எல்லாம் சரி... ஆனால், விலை கூடுவதை எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்வது? அங்கேதான் மோசடி ஆரம்பிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பெரிய பதவியை வகிக்கும் ஒருவரைக் கைக்குள் போட்டுக்கொண்டால், நிறுவனம் எப்போது என்ன முக்கிய முடிவை எடுத்தாலும் முன்கூட்டியே தகவல் வந்துவிடும். அதற்கேற்ப பங்குகளை வாங்கலாம், விற்கலாம், லாபம் பார்க்கலாம். இதுமட்டுமில்லை, ஒருவேளை அந்த நிறுவனத்தில் வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்தவந்தால், அங்கு தயாரிப்பு நடக்காத பட்சத்தில் நிச்சயம் விற்பனையும் தானாக குறையும். அதுபோன்ற நேரங்களிலும் சம்பந்தப்பட்ட பங்குகளை முன்கூட்டியே விற்று லாபம் பார்க்கலாம். உள்ளடி வேலைகள் ஒரு சாம்பிள்தான். சொல்லப்போனால், இது மிகவும் சின்ன லெவல் ஊழல். குறைந்த அளவு லஞ்சம் கொடுத்து இதுபோன்ற மோசடிகள் நடக்கும்.

அடுத்தடுத்து மோசடிகள்: அடுத்த லெவல் மோசடியைப் பார்ப்போம். உண்மையில் உற்பத்தியுமே செய்யாமல், ஒரு தொழிலாளிகூட வேலை செய்யாத, பத்துக்குப் பத்து வாடகை அறையைப் பிடித்து, அதை ஒரு நிறுவனமாகப் பதிவு செய்து, அதன் பெயரில் சில நூறு ஷேர்களை ஒருவர் வாங்குகிறார். அடுத்த 10 நாள்களில் அந்தப் பங்குகளின் மதிப்பு கூடுகிறது. தொடர்ச்சியாக அந்தப் பங்குகள் அதிகம் விற்கப்படுகின்றன. பங்குகளின் விலையும் நிதானமாக ஏறுகின்றன. ஏதோ புது நிறுவனம்போல என ஆர்வமாக மற்றவர்களும் அந்தப் பங்குகளை வாங்கத் தொடங்க, திடீரென அந்தப் பங்குகளின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கின்றன. எல்லாருமே அந்தப் பங்குகள் பற்றிதான் பேசுகிறார்கள். அதன் விலை உச்சத்தில் இருக்கும்போது, ஒருவர் மட்டும் தன்வசமுள்ள அந்தப் பங்குகளை மொத்தமாக விற்கிறார். "எவண்டா அவன், இந்த நேரத்துல இந்தப் பங்குகள் எல்லாத்தையும் விற்கிறான்... லூசுப்பையன்"-ன்னு எல்லாரும் நினைக்கும்போது, மறுநாளில் இருந்து அந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைய ஆரம்பிக்கிறது. கடைசியில் ஏறியதைவிட வேகமாக இறங்கி ஜீரோவுக்கு வருகிறது. அப்புறம்தான் தெரிய வருகிறது, அது ஒரு மோசடி வேலை; அப்படி ஒரு நிறுவனமே கிடையாது என்று!

இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு இணையம் வழியாக அந்த நிறுவனத்தின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் அலசிப் பார்த்துவிட முடியும். ஆனால், அன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனம் நிஜமானதா, டம்மியானதா என்று கண்டுபிடிக்கும் முன்பே அந்தப் போலி நிறுவனம் வந்த தடமும் போன தடமும் மறைந்துவிடும். அத்துடன், அப்போது இருந்த விதிமுறைகளும்கூட நிறைய ஊழல்களுக்கு சாதகமாகவே இருந்தன. எல்லா இடத்திலும் புரோக்கர்களின் ராஜ்ஜியம்தான். எல்லா ஓட்டைகளையும் ஹர்ஷத் மேத்தா பக்காவாக பயன்படுத்துகிறார். இரண்டே வருடங்களில் கோடி கோடியாக பணம் குவிக்கிறார். அவர் எந்த ஷேரை வாங்கச் சொல்றாரோ, அதன் விலை கூடுகிறது; எதை விற்கச் சொல்றாரோ, அதன் விலை மறுநாளே குறைகிறது. மும்பை ஷேர் மார்க்கெட் மட்டுமில்லை, இந்திய ஷேர் மார்க்கெட்டின் ராஜாவாக வலம்வர ஆரம்பிக்கிறார். பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் எப்படி யாராலும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாரா இருந்தாரோ, அதேபோல் ஷேர் மார்க்கெட் சூப்பர் ஸ்டார் ஆகிறார் ஹர்ஷத் மேத்தா.

இந்தியப் பங்குச்சந்தையை நான்கு இலக்கம் தாண்டி கொண்டுபோனதிலும் ஹர்ஷத் மேத்தாவின் பெரும் பங்கு உண்டு. ஆனாலும், ஹர்ஷத் மேத்தா திருப்தி அடையவில்லை. அவரது அடுத்த இலக்கானது மணி மார்க்கெட் (Money Market). மணி மார்க்கெட்டுக்கு முன்னால் ஷேர் மார்க்கெட் பெரிதல்ல. மணி மார்க்கெட்டில் எல்லாராலும் தடம் பதித்துவிட முடியாது. அப்போது, வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் தான் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. அந்த நிறுவனம் வேறு யாரையும் எளிதில் உள்ளே நுழையவிடவில்லை. குறிப்பாக, ஹர்ஷத் மாதிரியான வெளியாள்கள் வருவதை கடுமையாக எதிர்த்தனர். அவருக்கு எதிராக காய்களை நகர்த்தினர். ஆனாலும், ஹர்ஷத் உள்ளே நுழைந்தார். அங்கேதான் பிரச்னையும் உள்ளே நுழைந்தது. மணி மார்கெட்டைப் பொறுத்தவரையில் புரோக்கர்களின் ரோல் மிக முக்கியமானது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மாதிரியான ஒரு பெரிய வங்கி, சின்னச் சின்ன வங்கிகளுக்கு கடன் கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நேரடியாக ஒரு சின்ன வங்கிக்கு கடன் கொடுத்துவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அப்போதெல்லாம் நேரடியாகக் கடன் கொடுக்கும் சிஸ்டம் இல்லை. இடையில் புரோக்கர்கள் இருப்பார்கள். அங்கேதான் ஹர்ஷத் வருகிறார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.500 கோடியைக் கடனாகத் தருகிறது என்றால், அதற்கான வட்டி எவ்வளவு, எத்தனை நாள்களில் திருப்பித் தரவேண்டும் என்று முடிவு செய்வது எல்லாமே புரோக்கர்கள் மூலமாகத்தான். இந்தக் கடன் தொகையை வாங்கிக் கொடுத்து, அதைத் திரும்ப வாங்கித் தருவதும் புரோக்கர்களின் பொறுப்புதான். சொல்லப்போனால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அந்த 500 கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுப்பதே ஹர்ஷத் என்னும் புரோக்கரிடம்தான்!

சிக்கினார்  ஹர்ஷத் மேத்தா:

இந்த இடத்தில்தான் ஹர்ஷத் தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கிறார். ஸ்டேட் பேங்க் தரும் 500 கோடி ரூபாயை உடனே கடன் வாங்கும் சின்ன வங்கிக்குத் தராமல், அந்தப் பணத்தை அப்படியே ஷேர் மார்க்கெட்டில் போடுவார். அவர் முதலீடு செய்யும் பங்குகள் அனைத்துமேதான் நன்றாக விற்குமே... அப்புறமென்ன, பெரிய தொகையைப் போட்டு பெரிய லாபம் பார்த்துவிடுவார். அந்த லாபம் கைக்கு எட்டியவுடன் ஷேர் மார்க்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து சின்ன வங்கியிடம் தந்துவிடுவார். அதாவது, தன் பணத்தை முதலீடு செய்யாமலேயே பெரும் லாபம் பார்ப்பதுதான் ஹர்ஷத்தின் உத்தி. அவர் இப்படி முதலீடு செய்ததெல்லாம் மக்களின் பணம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மக்கள் பணம் டெபாசிட் செய்வர்; அந்தப் பணத்தை புரோக்கர் என்ற பெயரில் பெற்று இவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வார். அவர் விற்கும் பங்குகளை வாங்குவதும் மக்கள்.

இதனால், ஒருபக்கம் லாபமும் இன்னொரு பக்கம் புரோக்கரிங் கமிஷனும் வரும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா. அப்போதெல்லாம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து கடன் தொகையைப் பெற்றதும், சம்பந்தப்பட்ட சின்ன வங்கி ஒரு ரசீது தரும். இதுதான் மொத்த ரெக்கார்டே. அந்த ரசீதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் யார் நிர்வகிக்கிறார்களோ, அவர்களையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டார் ஹர்ஷத் மேத்தா. ஆக, ஹர்ஷத் எப்போது பணம் தந்தாலும் பிரச்னை இல்லை; அதான், கணக்கு எழுத ஆள் இருக்கிறதே. அப்படி ஒருமுரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து ஹர்ஷத் பெற்ற 500 கோடி ரூபாய்தான் தனது அனைத்து மோசடிகளும் வெளியேவர காரணமாக அமைகிறது. இதுதொடர்பான விவரம் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' மூலமா லீக்காகி, ஒரு சரித்திரத்துக்கு முடிவுரை எழுத ஆரம்பிக்கிறார்கள். இந்த ஹர்ஷத் மேத்தாவின் கதைதான் இந்த 'ஸ்காம் 1992' (Scam 1992) என்னும் வெப் சீரீஸ்.

அட்டகாசமான மேக்கிங்: பத்திரிகையாளர்கள் சுச்சேதா தலால், தேபஷிஷ் பாசு ஆகியோர் எழுதிய 'Who Won, who Lost, who Got Away' என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, பாலிவுட் இயக்குநர்களில் முக்கியமானவரான ஹன்சல் மேத்தா, ஜெய் மேத்தா இயக்கத்தில் 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 10 எபிசோடுகளைக் கொண்ட இந்த 500 நிமிடங்கள் ஓடும் வெப் சீரிஸ் ஓர் அட்டகாசமான - வெற்றிகரமான முயற்சி. ஆங்கிலத்தில் 'வால் ஸ்ட்ரீட்'டை மையமாக வைத்து ஏகப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரீஸ் வந்திருந்தாலும்கூட இந்தியாவில் பங்குச்சந்தை கதைக்களமாக வைத்து ஒன்றிரெண்டு படைப்புகள் எப்போதாவது வரும். அவையும் முழுக்க முழுக்க ஷேர் மார்க்கெட் பற்றி இருக்காது. 'The Wolf of wall street' போன்ற படங்களெல்லாம் இந்தியாவில் வெறும் கனவுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில், இந்த 'Scam 1992: The Harshad Mehta Story'-ஐ மிக மிக முக்கியமானதாகப் பார்க்கலாம்.

எனெனில், எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிறைய டெக்னிக்கல் அம்சங்களை உள்ளடக்கிய பங்குச்சந்தை உலகத்தை இயன்றவரையில் எளிமையாக திரைக்கதை வடிவம் தந்திருக்கிறார்கள். இந்த அட்டகாசமான முனைப்புக்கே மொத்த டீமுக்கும் பெரிய பூங்கொத்து தரலாம். ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஆரம்ப நொடியிலே இருந்தே போராடிய பத்திரிகையாளர்கள் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸாக எடுக்கும்போது நிச்சயம் சிரமங்கள் நிறைய இருந்திருக்கும். எல்லாவற்றையும் கடந்து ஓர் அற்புதமான த்ரில்லர் படம் பார்த்த உணர்வை, திரையில் கொண்டுவந்திருப்பது அதிசிறப்பு. அடுத்து நடிகர்களின் அட்டகாசமான தேர்வு. இதில் பெரும்பாலும் தெரியாத முகங்கள்தான் நடித்துள்ளனர். அதனாலேயே எல்லாருமே அந்தக் கதாபாத்திரங்களாக மட்டுமே பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிகின்றனர். மிக முக்கியமானது, வசனங்கள்.

இந்த மாதிரியான சீரிஸுக்கு வசனம்தான் மிகவும் முக்கியம். உண்மையிலேயே எங்குமே துருத்தி நிற்காத வகையில் மிகச் சிறப்பாக வசனம் எழுதியிருக்கிறார்கள். ஹர்ஷத் மேத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் ப்ரதீக் காந்தி. இவர் ஓர் அற்புதமான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். குஜராத்தை சேர்ந்தவரும்கூட. அதனாலேயே இந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர யாரையுமே யோசிக்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு பிரித்து மேய்ந்திருக்கிறார். பல காட்சிகளில் அப்படியே நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டுபோகிற மாதிரியான ஒரு நடிப்பு இவருடையது. இவருக்கான ஒப்பனையும் கச்சிதம். ஹர்ஷத் மேத்தா தம்பியா நடித்தவர், இவர்களின் நண்பர் பூஷணா நடித்தவர் என பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

இந்த சீரீஸ் பார்க்கும்போது, நிச்சயம் இயக்குநர் மணிரத்னம் எடுத்த 'குரு' படம் நினைவுக்கு வருவதை மறுக்க முடியாது. ஆனால், 'குரு'-வில் அபிஷேக் பச்சன் ஹீரோவாத்தான் இருப்பார். இறுதிக்காட்சியில், நீதிமன்றத்தில் வாதாடும்போது தன்னை நல்லவராக, நாட்டைக் காக்க வந்தவராக முன்னிறுத்துவார். அதை மக்களும் ஏற்றுக்கொள்கிற மாதிரி கன்வின்சிங்காக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில குரு செய்ததும் தகிடுதத்தங்கள்தான்.

ஆனால், இந்த சீரிஸில் ஹர்ஷத் மேத்தாவை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவே இல்லை என்பது நேர்மையான அணுகுமுறை. நமக்கும் நன்றாகவே தெரியும், அவர் கெட்டவர்தான் என்று. அவர் செய்த தவறுகளையெல்லாம் கண்டுபிடிக்கிற அந்தப் பத்திரிக்கையாளர்கள்தான் இங்கே ஹீரோக்கள். ஒருகட்டத்தில் ஹர்ஷத் மேத்தாவுடன் இருந்தவர்களே அவரை ஏமாற்றுவது எல்லாம், அவர் செய்த தவறுகளின் விளைவுதான் என்று காண்பித்திருக்கிறார்கள். மேலும், "ஹர்ஷத் மேத்தா நல்லவர்தான். கூட இருந்தவங்க ஏமாத்திட்டாங்கன்"-ன்னு எங்கேயும் சொல்லவே இல்லை. இது பார்க்கவே நன்றாக இருந்தது. உண்மைக்கு மிக மிக அருகிலிருந்து பார்க்கும் அனுபவம் இது.


அதேபோல், சிபிஐ விசாரணை என்பதும் இந்த சீரீஸில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது வழக்கமான கிரிமினல் கேஸ் இல்லை. இது ஒரு ஃபைனான்சியல் ஃப்ராடு கேஸ். பல விஷயங்கள் என்னவென்று புரியவே ரொம்பநாள் பிடிக்கும். அதையும் மீறி, திறமையாக சிபிஐ விசாரணை செய்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, அதே சிபிஐ விசாரணையில் இருந்த அரசியல் தலையீட்டையும் சரியாகப் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நிஜக்கதையும், கதைக்களும் முப்பது வருடங்களுக்கு முந்தையது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் இருந்து, சேட்டிலைட் சேனல்கள் வந்த காலகட்டம் ஒன்று; லேண்ட்லைன் போனிலிருந்து செல்போன் வந்த காலகட்டம் அடுத்தது; அமிதாப் பச்சன் சூப்பர்ஸ்டாராக இருந்து, அப்புறம் அவரது எல்லா படங்களும் தோல்வியடைந்து, அவர் கடனாளியாகி, பின்னர் 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சி மூலமாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டது அதற்கடுத்த காலகட்டம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்தையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்திரா காந்தி மறைவு, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனது, ராஜீவ் மரணம், அதற்குப் பிறகான ஆட்சி மாற்றங்கள், அரசியல் உறுதித்தன்மை இல்லாதது, புதிய பொருளாதார கொள்கைகளின் வரவு, ஒவ்வொரு பட்ஜெட் காலத்தின் பின்புலம் என மூன்று தசாப்தங்களை இதைவிட சுருக்கமாக எளிதில் சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கும் திரைக்கதை டீம் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த வெப் சீரிஸின் இறுதியில் வருகின்றன வசனம்போல, "என்னதான் எல்லாவித தொழில்நுட்பங்களும் இப்போது இருந்தாலும், என்னதான் ஹர்ஷத் மேத்தா பிரச்னைக்கு பிறகு இந்த சட்டங்கள் எல்லாம் கடுமையானாலும், விதிமுறைகள் மென்மேலும் வலுவாகிவிட்டாலும்கூட, ஊழல்களும் ஏமாற்று வேலைகளும் மட்டும் குறையவே இல்லை. அது நடந்துக்கிட்டேதான் இருக்கு" என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒட்டுமொத்தமாக, 'கெட்டபய சார், இந்த ஹர்ஷத் மேத்தா!' என்ற ஆன்ட்டி ஹீரோயிஸ கோணத்தில் மட்டுமல்ல... நம் அமைப்புமுறையில் மோசடிகள் தொடர்கதையாவதை கூர்ந்து கவனிக்கவும் வைக்கும் இந்த சீரிஸ் நிச்சயம் பார்க்கவேண்டிய படைப்பு!

கட்டுரையாளர் - பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com