நெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்

நெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்
நெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்

நெல்லை மாநகரின் சுற்றுவட்டார கிராமங்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஏழை மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்திவரும் தன்னார்வலர்களின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிசம்பர் மாதம் 13-ம் தேதி இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரம் காவலர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு, நெல்லை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் மற்றும் குற்றப்பிண்ணனி கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு அரசு பணி கிடைக்கும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர் திவ்யபாரதி மற்றும் மகேஷ் என்ற தன்னார்வலர்கள்.

இந்தப் பயிற்சி வகுப்புகளை "காவலர் சிறப்பு பயிலரங்கம்" மூலம் தயார் செய்கின்றனர். 25 வயது கூட தாண்டாதா இளம் தன்னார்வலர்களால் நடத்தப்படும் இந்தப் பயிலரங்கம், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகளை தொடங்கியது. அக்டோபர் நவம்பர் என இரண்டு மாதங்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. நாள்தோறும் காலையில் 8 மணிக்கு தொடங்கும் வகுப்புகள் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இரண்டு மாத பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து டிசம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை தொடர் மாதிரி தேர்வுகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிலரங்கத்தில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் 750 ரூபாய் மதிப்பிலான காவலர் தேர்வுக்கான புத்தகம் வழங்கப்படுகிறது.

அந்தப் புத்தகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பு பணியிடங்களுக்கான உளவியல் - கணிதம் - பொது அறிவு பாடங்களை உள்ளடக்கிய ஆயிரத்திற்கும் அதிகமான வினா விடைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 10 ஆசிரியர்கள், சுழற்சி முறையில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்துகின்றனர்.

நெல்லை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் மூலம் நெல்லை சந்திப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வகுப்பறைகள் கிடைத்துள்ளது. முதலில் மாதம் மாணவ, மாணவிகளுக்கு டீ வாங்குவதற்கு போதுமான நிதி இருந்த நிலையில், நாளொன்றுக்கு 400 ரூபாய் வரை செலவானதால் டீ வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மூலம் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் வாரம் ஒருமுறை மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு துறைசார்ந்த வெற்றியாளர் மூலம் சிறப்பு தன்னம்பிக்கை ஊட்டும் வகுப்புகளை கொடுக்கின்றனர்.

இது குறித்து திவ்யபாரதி கூறும்போது“ 10, 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகளை படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் அரசு தேர்வுக்கு தயாராவது எப்படி ? அரசுப் பணியிடங்களை பெறுவதற்கு எதை படிக்க வேண்டும் ? போன்ற எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறார்கள். நாள்தோறும் கிடைக்கும் நாளிதழை படித்து அரசு தேர்வை எதிர் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இது குறித்த ஒரு ஆய்வை நடத்தியப் பிறகுதான் இந்த காவலர் பயிலரங்கம் உருவாக்கும் எண்ணம் வந்தது. வழியற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தப் பயிலரங்கம் இன்னும் தொடரும் என்கிறார்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com